ஹைக்கூவும் பொய்க்கூவும்

2008 ஜனவரி 24

சுஜாதா எழுதிய ஹைக்கூ ஒரு புதிய அறிமுகம் (உயிர்மை பதிப்பு) என்ற புத்தகத்தை படித்ததில் ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களை பற்றியும், ஜப்பானிய கவிதைகளின் இலக்கணங்களையும், அவைகளின் தமிழோடு உள்ள ஒற்றுமை வேற்றுமைகளையும் அறிமுக நிலையில் புரிந்துகொள்ளமுடிந்தது. ஹைக்கூ பற்றி குன்ஸாகத்தான் புரிந்தது. என் குறைதான். நிறைய பொய்க்கூக்களை இதுவரை படித்துவிட்டதனால் இருக்கலாம்.

புரிந்தவரை விளக்குகிறேன் (உண்மையில், நான் புரிந்துகொள்ளவே விளக்குகிறேன்).

நேரில் பார்த்த இயற்கை காட்சி, அனுபவித்த நிகழ்வு, அகப்பட்டால் ஒரு சிறு முரண்பாடு இவற்றை கலக்கி அவைகளை பற்றிய நமது எண்ணங்களை, முக்கியமாக நம் விமர்சனங்களை முடிந்தவரை தவிர்த்து, அப்ஸ்ட்ராக்டாக, ஐந்திலிருந்து ஏழெட்டு அசைகளுக்குள் அடங்கும் வார்த்தை பிரயோகத்தில், இரண்டு அல்லது மூன்று வரிக்கு மிகாமல் தந்தால் ஹைக்கூ.

ஹைக்கூ ஒரு ட்ரிக்கர் என்கிறார் சுஜாதா.

அமைதியான குளத்தில் மிதமான வேகத்தில் சிறுகல்லை எறிவது போல, படித்ததும் வாசகனு்க்கு சிறிது காலம் ஒரு தொடர் எண்ணக்கிளர்ச்சி இருக்கவேண்டும். ஏன், எதற்கு, எப்படி, எதனால், ஒருவேளை… என்று கேள்விகள் பிறந்து வாசகனே பல சாத்தியமான பதில்களை தோற்றுவித்து அனுபவிக்கவேண்டும்.

இதில் கவனிக்கவேண்டியது மிதமான வேகத்தில், சிறு கல். தொபுகடீர் என்று பெரிய பாறையை போடக்கூடாது. வாசகன் பேஸ்தடித்துபோய் கவிதை படிப்பதை நிறுத்திவிடுவான்.

ஹைக்கூ எழுதி பழக சில யோசனைகளை நல்ல உதாரணங்களுடன் விஸ்தாரமாக தருகிறார் சுஜாதா. அவைகளின் சாராம்சம்: 1) நேரடி அனுபவம், நீங்கள் பார்த்ததை எழுதுவது 2) அலங்காரமில்லாமல் பார்த்ததை அப்படியே எழுத்தில் கடத்துவது 3) மூன்று வரிகளுக்குள் 4) முதல் இரண்டு வரிகளில் ஒரு கருத்தும் அடுத்ததில் இன்னொன்றும் 5) வார்த்தை தோரணமாக மட்டுமில்லாமல் பின்னனியில் எண்ணங்கள் இருந்தால் சிறப்பு 6) முதலில் எழுதியதை திருத்தி குறைத்து எழுத பழகுவது 7) எழுதியதை படித்து காட்டுவது (ஒரு முறை போதும்) 8) கேட்பவர்கள் அடித்தால் வாங்கிக்கொள்வது. 9) திருப்பி அடிக்காமல், திருத்தி அடிப்பது…

இதில் கஷ்டம் ஹைக்கூவில் நம் விமர்சனத்தை துறந்து, மிகையில்லாமல் காட்சியைமட்டும் விவரிப்பது.

குழந்தைகளுக்கு பார்த்ததை சொல்லவைத்து பழக்கினால் மிகையில்லாமல் அவர்கள் கூறுவதில் ஹைக்கூ தென்படலாம் என்கிறார். நல்ல யோசனை. என் குழந்தையிடம் இன்று காலை பார்த்ததை பற்றி சொல் என்றவுடன், ஏதோ விளையாட்டில் மும்முரமாக இருந்தவள்

மழைக்காடு
குகை
குட்டி சிறுத்தை மட்டும்

என்றாள் (சற்று திருத்தியிருக்கிறேன்). விசாரித்ததில் தாத்தா வீட்டில் டிவியில் பார்த்த ஒரு குழந்தை நிகழ்ச்சியிலிருந்து வசனத்தில் நினைவில் பட்டதை சொன்னாளாம். ஹா, ஹைக்கூ போல்தான் இருக்கிறது எனக்கு.

புஸ்தகத்தை முழுவதும் படித்தபின் ஒரு படிமத்தில் (லெவலில்) சற்றென்று மனதில் பட்டதெல்லாம், மிடாஸ் டச்சாக, ஹைக்கூ போல் இருப்பது என்னவோ நிஜம். உதாரணத்திற்கு கவிஞர் எழுதிய பாடல் வரிகளில் சற்றென்று ஞாபகம் வந்த

கொடியசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடியசைந்ததா

கூட ஹைக்கூ என்றுதான் நினைக்கிறேன்.

ஆனால் இதே ரேட்டில் போனால் சோ அவர்களின் (சில வருடங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட) கிண்டல் டி.வி. தொடரான சரஸ்வதி சபதத்தில் கதாநாயகனும் நாயகியும் கிணற்றின் அடிப்படியில் உட்கார்ந்துகொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து பேசும் காட்சியை

கிணற்றினுள் குரல்
இதெல்லாம் என்ன
நீயே பாரேன்

என்று எழுதினால் ஹைக்கூபோல்தான் இருக்கிறது. வாசகனை ஏதாவது தவளைகள் பேசுகிறதோ, அல்லது வீட்டிலிருந்து உயிருடன் டிவிபெட்டியை யாராவது கடுப்பில் கிணற்றினுள் போட்டுவிட்டார்களா என்று பலவாறு எண்ணவைக்கலாம். குழப்பமும் அனுபவந்தானே.

அதேபோல், இந்த அப்ஸ்ட்ராக்ஷனில் ஒரு அபாயம் உள்ளது. பார்த்த காட்சியை, நிகழ்வை சொல்கையில் சுருக்கிவரையவேண்டும், விமர்சனையாகாது, மிகையாகாது என்று முயன்று ராஜாரமனை சுருக்கி ராஜாவாக்கி, மேலும் சுருக்கி ரா ரா என்று செய்யக்கூடாது. எழுதும் ஹைக்கூ “ஐஸ் கடல், பனிமலை, பெங்குயின்” என்று என் குழந்தை சொன்ன இன்னொரு செட் வசனம் போலாகிவிடும். மிகையிருக்காது. வாசகனுக்கு பிரமிப்பும் இருக்காது. எண்ணமும் இருக்காது.

ஹைக்கூவிலிருந்து ரெங்கா (பாட்டுக்கு பாட்டு போல, ஆனால் ஒருவர் எழுதி எழுப்பிய எண்ணத்திலிருந்து தொடர்ந்து மற்றொருவர் எழுதுவது), தொடர் ஹைக்கூ, சென்றியு (நகைச்சுவை கலந்த ஹைக்கூ. ஹிஹிக்கூ?), நையாண்டி, மனித இயல்பு, ஹைபுன் (நடுவில் ஹைக்கூ தோன்றும் சிறு கட்டுரை வடிவத்தில் எழுதுவது), சுருக்கென்ற உரைநடை என்று பலவற்றிற்கு தாவலாமாம். ஏன், சென் பௌத்தம் தொட்டுப்பார்க்கலாமாம்.

நான் இன்னமும் சென் எஸ்டில்லோவையே தொட்டுப்பார்த்ததில்லை…

சரி படித்தது போதும் இனி கிழிப்போம் என்று சற்று நேரம் மலங்க மலங்க யோசித்ததில் கண்ணலெனத்தகு இன்னமுதத்தமிழில் நம் ஹெச்.பி. லேப்டாப்பில் புறப்பட்டது இது

மோட்டு வளை
சிலந்தி வலை
மாட்டியது ஹைக்கூ

புரியவில்லை என்று அடிக்க வருமுன் சுஜாதா கூறும் இதையும் கேட்டுவிடுங்கள்: எல்லா ஹைக்கூவும் வாசகனுக்கு புரியவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. புரியவில்லை எனில், விட்டுவிடுங்கள். உங்கள் தப்பில்லை. ஹைக்கூ வலிக்காது.

ஆனால் அடித்தால் வலிக்கும். எனக்கு.

உங்களுக்கும் எழுத வேண்டும் என்றோஅல்லது இந்த இலக்கிய வடிவத்தை சரியாக அனுபவிக்கவேண்டும் என்றோ இருந்தால் வாங்கிடுவீர் இந்த சுஜாதாவின் ஒல்லி புத்தகத்தை (என்னிடமிருந்தல்ல).

ஆங்கிலத்தில் ஹைக்கூ எழுத, படிக்க வேண்டுமானால், ஆதாரமாக சுஜாதா குறிப்பிடும் William J Higginson and Penny Harmer எழுதிய Haiku Handbook என்ற குண்டு புஸ்தகத்தை நாடலாம். விக்கீபீடியா ஹைக்கூ பக்கத்திலிருந்தும் ஆரம்பிக்கலாம்.

முடிக்கும் முன், இயற்கை காட்சிகளை வைத்து என் இன்னொரு முயற்சி

காலை சூரியன்
பசும்புல் தரையில்
ஏழுகால் சிலந்தி

12 பதில்கள் leave one →
  1. 2008 ஜனவரி 24

    தண்ணொளி நள்ளிரவு
    சுவர்கோழி கீதம்
    கம்ப்யூடரில் ப்ளாக்

    இது ஹைகூவா?

  2. 2008 ஜனவரி 25

    லக்ஷ்மி: எனக்கு ஹைக்கூ போல தான் இருக்கிறது…

    “நள்ளிரவு”க்கு பதில் “இரவு” போதும் என்று தோன்றுகிறது. “கம்ப்யூட்டரில்” பதிலாக “வலையில்”?

  3. 2008 ஜனவரி 30

    Will this be considered haiku ?

    “hot afternoon
    endless meeting
    part of my life lost forever”

    The one remember instantly (broken wordings to follow)

    ” Vudaintha vazhaiyal
    Thaneeril poten
    Ah ah ethanai vazhalgal…”

    Wondering why you have not mentioned about Abdul Rehaman (did I miss it ?) who is considered to father of tamil haiku ?

  4. 2008 ஜனவரி 31

    My attempt !!!

    Kashtapattu Minnanjal Arattayil
    kidaitha pen
    Hello Uncle endral

  5. 2008 பெப்ரவரி 1
    Chandrasekar permalink

    kathirunda varai
    pookavillai
    pavazhamalli

    I guess this is a haiku.

  6. 2008 பெப்ரவரி 2

    @Chandrasekar: nice one

    @Karthi: I have read only one book of Abdul Rehman; not enough to judge and recommend…

    @Vijay Ganesh: tough luck…

  7. 2008 மே 26

    “”பெரிய பாறையை போடக்கூடாது. வாசகன் பேஸ்தடித்துபோய் கவிதை படிப்பதை நிறுத்திவிடுவான்.”"

    :)) நல்ல பதிவு.
    ஆனால்
    கொடியசைந்ததும் காற்று வந்நதா
    காற்று வந்ததும் கொடியசைந்ததா

    என்பதை ஹைக்குவாக ஏற்கமுடியவில்லை.

  8. 2008 மே 26

    கோகுலன்:

    வருகை, வாழ்த்திற்கு நன்றி.

  9. 2008 மே 29
    முத்துக்குமார் permalink

    சற்றே என்னூட்டம் :

    சுஜாதாவை படித்தவரையில் நான் புரிந்துகொண்டது ஹைக்கூவில் காட்சிப்படுத்தல் மிக முக்கியம்; அதை சொல்லும் விதத்தில் கடைசீ வரியில் ஒரு எதிர்பாராத திருப்பம் தந்து சில செய்திகளை சொல்லி யோசிக்க வைக்க வேண்டும்.

    ஜூ.வி.யில் பல்லாண்டுகள் முன் ஹைக்கூ பற்றி கட்டுரை எழுதி வாசகர்களை எழுதவைத்து சுஜாதா தேர்வு செய்ததில் எனக்கு இன்றும் நினைவில் நிற்கும் ஹைகூ.

    கண்ணகி சிலையின்
    கைசிலம்பில்
    சிலந்திவலை.

    மூன்றாம் அடியில் சிலந்திவலையை நீங்கள் எதிர்பார்க்கவில்லை என்றால் அது ஹைகூவின் முதல் வெற்றி.

    தெருவுக்குத்தெரு சிலைகள் நட்டு அவற்றை பராமரிக்காமல் சிலந்திவலை படரவிட்டிருக்கும் அபத்தம் உங்களுக்கு (அல்லது தெருமுனை சிலைகள் காக்காய்கள் உபயத்தில் தலைமட்டும் சற்று அழுக்கு வெளுப்பில் இருப்பது) நினைவுக்கு வந்து சற்றேனும் புன்னகைக்க வைத்தால் அது ஹைக்கூவின் அடுத்த வெற்றி.

    மதிப்பீடுகளை பின்பற்றாமல் வெறும் அடையாளங்களை சடங்காக்கி கொண்டாட ஆரம்பித்து அது நமது சமூகத்தில் தோற்றுவித்திருக்கும் அவலங்கள் …. என்றெல்லாம் எதிர்நீட்டி சிந்திக்க ஆரம்பித்துவிட்டால் ….

    இந்த ஹைக்கூ தன் பிறவிப்பயன் அடைந்துவிட்டது என்றே பொருள்.

    இன்னொன்று (நினைவில் இருந்தவரை) :

    சாலையோர பிணத்தின்
    திறந்திருந்த கண்களில்
    மழைநீர்

    மறைந்த எங்கள் தமிழ்ப்பேராசிரியர் (சொ.சி என்று அறியப்பட்டவர்) எழுதி எங்கள் வகுப்பில் சட்டென்று பரவலாக சிரிப்பலை எழுப்பினது இது.

    கற்பூர ஒளியினில்
    கண்மூடிநின்றேன். நினைவில்
    விட்டுவந்த செருப்பு

    தி.ஒ.க யாகூ குழுமத்தில் என் முயற்சி இது (அதானே, எங்கடாப்பான்னு பாத்தேன்)

    நீளிரவில் தனிபயணம்
    கூடவே வருகிறது
    வானத்து நிலா

    அன்புடன்
    முத்து

  10. 2009 பெப்ரவரி 14
    perinba permalink

    நானும் அந்த புத்தகத்தை படித்துத்தான் என் ஹைக்கூவை திருத்திக்கொண்டேன்….என்ன ஒற்றுமை என் பெயரும் அருண்…

    என்னோட முயற்சி சில:

    ஓடும் நகரம்
    வண்டியை நிருத்தி
    தேன் மிட்டாய் வாங்குகிறேன்

    மதிய பேருந்து
    புத்தகத்தின் கடைசி பக்கம்
    அத்தனை சுத்தம்.

வரு தடங்களும் வரு பிங்குகளும்

  1. Snap Judgement
  2. thamizmaNam : Tamil Blogs Aggregator

மறுமொழி இடுக

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS