சென்னையில் சங்கமம் 2008
கையில் வாட்டர்பாட்டில், குழந்தை, கேமரா சகிதம் சென்னையில் சங்கமம் 2008 நிகழ்ச்சிக்கு இன்று சென்றிருந்தேன். முக்கியஸ்தர்கள் பலர் வருகையால் பந்தோபஸ்து அதிகமாக இருந்ததால் நேற்று செல்லவில்லை. இன்றும் சற்று தாமதமாகவே, யாரோ ஒருவர் சற்று அபஸ்வரமாக இறைவந்தனம் செய்துமுடிக்க திடலின் உள்ளே நுழைந்தேன். நல்ல கூட்டம். தமிழ் கலை நிகழ்சிக்கு ஆரம்பம் முதலில் கூட்டம் இருப்பதில் மகிழ்ச்சியாக இருந்தது.
போகி, பொங்கல் ஆகிய தமிழர் பண்டிகைகளின் சிறப்பை பறைசாற்றும் விதமாக நிகழ்ச்சியை அமைத்திருந்தார்கள். கிராமத்தில் இருக்கும் பண்ணையார் வீடுபோல் செட்போட்டிருந்தார்கள். சென்றவருடத்திலிருந்து சற்று பிரமிப்பு கம்மிதான். நன்றாகவே இருந்தது.
போகியில் குப்பைகூளங்களை சுத்தம் செய்வது பற்றி பாடி சாடிகொண்டனர். பிறகு பிரமாதமான உருமியுடன் குப்பைகளை திரட்டுவதுபோல் ஒரு நடனம். பெரியவர்கள் முடித்ததும் உருமி, தாரை, தப்பட்டை, மேளம் என தாளவாத்தியங்கள் பட்டையை கிளப்ப கலர் பாவாடைகளில் குழந்தைகளும் ஆடினர். சற்று முக சுளிக்கும் படியாக. தாளவாத்தியத்தின் பிழையில்லாத கோர்வைகளையும், நடைகளையும் மெச்சுவதா, இல்லை பக்கத்தில் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு புரியாத வயதில் தாளத்திற்கு இடுப்பை வெட்டி உடம்பெல்லாம் சுளுக்கிக்கொள்ளும்படி குதித்து ஆடும் குழந்தைகளை சாடுவதா? தீர்மானிப்பதற்குள் ஆட்டம் முடிந்துவிட்டது.
அடுத்து பொங்கல் திருநாள் பற்றி ஒரு பாலகன் முடிந்தவரை பிழையில்லாமல் சுருக்கமாக ஜாதிமத பேதமில்லாமல் எல்லோராலும் கொண்டாடப்படவேண்டிய, இயற்கைகு நன்றி தெரிவிக்கும் திருநாள் இது என்று விவரித்தான். கூடவே குடுகுடுப்பையாகவும் பொய்கால் காளையாகவும் வேடமணிந்து நிகழ்ச்சியை “காம்பியர்” செய்தவர்கள் சற்று மிகையாக சத்தமாக பேசினார்கள். கூட்டத்தில் லேசாக சிரித்தார்கள்.
பொங்கல் திருநாள், வீணை, வயலின், குழல் போன்ற வாத்தியங்களுடன் பூபாளத்தில் (ராகம்) தொடங்கி, பிறகு குழலில் மட்டும் கலியுக வரதன் என்று பிருந்தாவனியில் (ராகம்) உயிர்தெழுந்து, ஞாயிறை போற்றுவோம் என்று பள்ளி மணப்பாடப்பகுதியில் கிடார், ட்ரம்ஸ் எல்லாம் சேர்ந்துகொள்ள, ஜோராக பயணித்தது. பிறகு ஸ்வரகோர்வையெல்லாம் அருமையாக பாடி தாளவாத்திய சங்கமத்தில் முடிந்தது. இந்த சங்கீதம் பல ராகங்களின் சங்கமம் என்று சொல்லவேண்டும்.
பின்னர் கைத்தட்டல் ஒலியுடன் பேஸ் கிடார் முழங்க வந்தது பேட்டை ராப். தமிழரின் உணவுவகைகளின் அருமையயும் அவசியத்தையும் துடிப்பான இசையில் வெண்டைக்காய் பாவற்காய் என்று மேற்கத்திய தாளத்திற்கேற்ப சமைத்து உணர்த்தியது. பாடியவர் மிக அருமையாக செய்தார். யார் என்று தெரியவில்லை. இதுவரை இல்லையெனில், நிச்சயம் தமிழ் சினிமாவில் பின்னனியில் முன்னனியில் வருவார்.
சினிமாத்தனமும் சத்தமும் ஜாஸ்தியானதாலும், முக்கியமாக குழந்தை தூக்கமாக சாய்ந்துவிட்டதாலும், மேற்கொண்டு பார்க்காமல் எழுந்துவந்துவிட்டேன்.
காதலனில் ரஹ்மான் கொணர்ந்த தமிழர்களின் பாரம்பரியமிக்க “ராப் இசை”, தமிழர்களின் பண்பாட்டிலேயே கலந்திருக்கும் கிடார், வயலின், ட்ரம்ஸ் போன்ற “தமிழ் இசை கருவிகள்”, போதாகுறைக்கு பூபாளம், பிருந்தாவனி, மாயாமாளவ கௌளை என்று தமிழர்களுக்கு பிடித்த “கர்நாடக இசை” ராகங்கள், கோர்வைகள், தீர்மானங்கள், நடைகள் இவற்றையெல்லாம் உபயோகித்தாலும், சிரமேற்கொண்டு பல நாள் பயிற்சி செய்து, நிச்சயமாக ஜாதிமத வேறு பாடில்லாமல் கேட்பவர் அனைவருக்கும் இனிமையாய் படைத்திட்டது இந்த சங்கமம்.
இதில் ஒன்று புரியவில்லை. இரண்டாண்டுகளாக நடந்துவரும் இந்த மாடர்ன் தமிழ் பண்பாட்டு சங்கமத்தை குலைப்பதற்காகவே கடந்த மூன்றாண்டுகளாய் சென்னையில் திருவையாறு நிகழ்ச்சி சதியெண்ணத்தில் ஒரு ஜாதியினரினால் நடத்தப்பட்டு வருகிறது என்று எதற்கு சிலர் அபிப்ராயப்படுகிறார்களோ.
